Saturday, October 25, 2014

nilaa

அன்பு நிலா,

அகலிகைக் கல்லின் அடியில்
அருகம் புல்லாய் என் காத்திருத்தல்
சுமைகள் 
வேலைகளால் மட்டுமல்ல ;
நம் நினைவுகளாலும் தான்
விதி ,
விலங்குடைக்க
என்று நாள் குறித்திருக்கிறது
என்பது தெரியவில்லை
தினம் தினம்
மனம்
இறக்கை கட்டி ,
இறக்கி வைக்கிறது ,
பறக்காமலே .
உன் தூதுக்கு
உடனாக
புறா பறக்கவிடமுடியாமல்
உள்நாட்டு நிலவரம் .
தொலைந்துபோன காலங்களில்
தொலைந்துபோன பொருள்களும்
தொங்குகின்றன
தோள்களில் வலிகளாய் .
வரவின் வாசல் வர
செலவாகலாம்
சில வாரங்கள்
இதோ இதோ என்று
எண்ணுகிறேன்
இதை இதை என்று
தெளியாமல்
எந்தத் தொலைவிலும்
நிலா இனிப்பது
இதயத்தின் ஒரே சுகம்
உள் இரைச்சல்
ஊமை உதடுகள் தாண்டமுடியாமல்
எழுதுகோல் வழியாக
அழுது முடிக்கிறது ...
நினைக்கும்போதெல்லாம் ...
உயிரை உறிஞ்சி
உலரப் போடுகிறது
உன் ஈர வார்த்தைகள்.
நெருப்பாய் எரிக்கிறது
உன் நினைவு .
உள் குளிரவைக்காத
மழை
ஊரெங்கும்
உன் இமை திறவாமல்
கிழக்கும் மேற்கும்
அர்த்தமற்ற திசைகள்
உன் மலர்த் தொடுகையின்றி
இரவும் பகலும்
பொருளற்ற பொழுதுகள்
இதயத்தில் அடிக்கடி
படபடக்கிறது
ஈரச் சரசரப்பு .
சங்கடப் படுகின்றன
சாட்சித்துணைகள்
விளைச்சலுக்கு முன்பாகவே
அறுவடையாகின்றன கனவுகள்
காலம் வளர்கிறது
கனவும் கலங்குகிறது
எங்கிருக்கிறாய் நீ
தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும் ;
உன்னைக் கண்டுபிடித்த இடத்திலேயே
தொலைத்துவிட்டேன் .
இருக்கும் இடம் தெரிந்தும்
தடம் அமையவில்லை
என்று கைகூடும் நம் சந்திப்பு
தெரியவில்லை
முயன்று முயன்றும்
முடியவில்லை
எத்தனை இல்லைகள் இருந்தாலும்
நீ இல்லாமல் இல்லை
நானும்
என் கவிதைகளும் ...

இப்படிக்கு
என்றும் உன்
நான் 

No comments:

Post a Comment