Saturday, October 25, 2014

nilaa

அன்பு நிலா,

அகலிகைக் கல்லின் அடியில்
அருகம் புல்லாய் என் காத்திருத்தல்
சுமைகள் 
வேலைகளால் மட்டுமல்ல ;
நம் நினைவுகளாலும் தான்
விதி ,
விலங்குடைக்க
என்று நாள் குறித்திருக்கிறது
என்பது தெரியவில்லை
தினம் தினம்
மனம்
இறக்கை கட்டி ,
இறக்கி வைக்கிறது ,
பறக்காமலே .
உன் தூதுக்கு
உடனாக
புறா பறக்கவிடமுடியாமல்
உள்நாட்டு நிலவரம் .
தொலைந்துபோன காலங்களில்
தொலைந்துபோன பொருள்களும்
தொங்குகின்றன
தோள்களில் வலிகளாய் .
வரவின் வாசல் வர
செலவாகலாம்
சில வாரங்கள்
இதோ இதோ என்று
எண்ணுகிறேன்
இதை இதை என்று
தெளியாமல்
எந்தத் தொலைவிலும்
நிலா இனிப்பது
இதயத்தின் ஒரே சுகம்
உள் இரைச்சல்
ஊமை உதடுகள் தாண்டமுடியாமல்
எழுதுகோல் வழியாக
அழுது முடிக்கிறது ...
நினைக்கும்போதெல்லாம் ...
உயிரை உறிஞ்சி
உலரப் போடுகிறது
உன் ஈர வார்த்தைகள்.
நெருப்பாய் எரிக்கிறது
உன் நினைவு .
உள் குளிரவைக்காத
மழை
ஊரெங்கும்
உன் இமை திறவாமல்
கிழக்கும் மேற்கும்
அர்த்தமற்ற திசைகள்
உன் மலர்த் தொடுகையின்றி
இரவும் பகலும்
பொருளற்ற பொழுதுகள்
இதயத்தில் அடிக்கடி
படபடக்கிறது
ஈரச் சரசரப்பு .
சங்கடப் படுகின்றன
சாட்சித்துணைகள்
விளைச்சலுக்கு முன்பாகவே
அறுவடையாகின்றன கனவுகள்
காலம் வளர்கிறது
கனவும் கலங்குகிறது
எங்கிருக்கிறாய் நீ
தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும் ;
உன்னைக் கண்டுபிடித்த இடத்திலேயே
தொலைத்துவிட்டேன் .
இருக்கும் இடம் தெரிந்தும்
தடம் அமையவில்லை
என்று கைகூடும் நம் சந்திப்பு
தெரியவில்லை
முயன்று முயன்றும்
முடியவில்லை
எத்தனை இல்லைகள் இருந்தாலும்
நீ இல்லாமல் இல்லை
நானும்
என் கவிதைகளும் ...

இப்படிக்கு
என்றும் உன்
நான் 

Wednesday, September 21, 2011

அழகு

அழகு
அழகாயிருப்பது எப்படி?
ரொம்ப (நிரம்ப)எளிது .
அன்பாயிருங்கள்
அவ்வளவுதான்

Thursday, March 10, 2011

கலைஞருக்கு எழுதப்பட்ட ஒரு காதல் கடிதம்..?


கலைஞருக்கு எழுதப்பட்ட ஒரு காதல் கடிதம்..?



கடிதம் எழுதுவதிலும், தந்தி கொடுப்பதிலும், கை தேர்ந்த அரசியல்வாதி கலைஞர். கலைஞருக்கே காதல் கடிதமா?. ஆம்!
இது கண்டிப்பான கடிதம் அல்ல பிரியத்தில் எழுதப்பட்ட கடிதம். ஆதலால் காதல் கடிதம் என்கிறோம். சிக்கலான விடயங்களில் கருத்துத் தெரிவிக்க உடன் பிறப்புக்கு எழுதும் கடிதம், முடிவெடுக்க முடியாது தப்பிக்க நினைக்கும் விடயங்களில் தந்திரமாக தந்தி அடிப்பது என்பன கலைஞர் பார்மூலா.
காங்கிரஸில் இருந்த விலகிய தமிழருவி மணியன் அன்மையில் கலைஞருக்கு அதே பாணியில் ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியிருந்தார். அது அரசியல் பேசும் கடிதம். ஆனால் இங்கு நாம் பதிவு செய்வது அத்தகைய கடிதம் அல்ல. இது கள்ளுறும் காதல் கடிதம். கடிதத்தை வடித்தவருக்கும், முதலில் பதிவு செய்த 'பசுமை இந்தியா' அமைப்பின் வலைத்தளத்துக்கும் உரிய நன்றிகளுடன் இங்கே மீள் பதிவு செய்கின்றோம்.-4Tamilmedia Team
ஐயா வணக்கம்! என்னை பற்றி சொல்லும் முன் உங்களுக்கு என் வாழ்த்தை தெரிவிக்கிறேன். காரணம், குமரியில் வானுயர சிலை அமைத்தீர்களே வள்ளுவர் அவர் என்ன சொன்னார் தெரியுமா?

" செம்பொருள் கண்டார்- என்றும்
ஞாலத்து அறம்பொருள் கண்டார்"

இதன் மறைமுக பொருள், "தத்துவ ஞானிகள் ( நமக்கும் மற்றவருக்கும் புலப்படாத ஒரு உண்மையை கண்டுபிடித்துக் கூறுபவர்கள்) தாம் தத்துவ ஞானிகள். இன்னும் விளக்கமாக சொன்னால்...திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ள காட்சியர் என்றும் இவர்களை சொல்லலாம். தத்துவஞானிகள் என்பவர்கள் உடல், உயிர்,இயக்கம்,பொருள், உலகம், சமுதாயம், பிரபஞ்சம் ஆகியவற்றின் உண்மை நிலைகளையும், இவற்றிற்குள்ள தொடர்புகளையும், உறவுகளையும் ஆய்பவர்களே. இவர்கள் அறிவியல் கற்ற மேதைகள் அல்ல. ஆனால் அதே நேரத்தில் பிதற்றுபவர்களும் அல்ல.

1724 ல் நவீன ஐரோப்பிய தத்துவ இயலின் தந்தையான இமானுவேல் கான்ட் என்பவர் இருந்தார். இவருக்கு அறிவியலை பற்றி தெரியாது. இவர் ஒரு தத்துவஞானி. இவர் என்ன சொன்னார் தெரியுமா? இந்த உலகமும், சூரியன் போன்ற கோள்களும் வானமண்டல்திலுள்ள கடின வெண்மேகத்திலிருந்து (NEBULAR) உருவாகி இருக்கலாம் என்றார்.

பிற்காலத்தில் பிரெஞ்சு நாட்டு விஞ்ஞானிகளும் வானியல் நிபுணர்களும் அறிவியல் அடிப்படையில் இமானுவேல் கான்ட் சொன்னதை உண்மை என்று உறுதி செய்தனர். இதில் பிறந்தது தான் (NEBULAR HYPOTHESIS). அதாவது ஒரு மிகப்பெரிய அறிவியல் இயக்கத்தை அறிவியலே படிக்காத ஒரு தத்துவ மேதை எளிதாக சொல்லி விட்டிருக்கிறார்.

தத்துவஞானிகள் எப்போதும் இந்த உலகத்தின் நன்மைக்காக சிந்தித்த காரணத்தால் பிரபஞ்சம் அவர்களுக்கு எளிதாக புரிந்து போனது. இப்படிப்பட்ட அரிய ஆற்றல் பெற்ற தத்துவஞானிகள் தான் ஒவ்வொரு நாட்டையும் ஆளவேண்டும் என்று பிளாடடோ சொல்லியிருக்கிறார். நீங்கள் இப்படி தத்துவஞானியாக இல்லாமல் தமிழை வைத்தே 5 முறை தமிழ்நாட்டை ஆண்டு விட்டீர்கள்.எனவே எனது வாழ்த்துக்கள்.

ஆனால் தமிழ்நாட்டின் இன்றைய நிலை என்ன என்பது உங்களுக்கே தெரியும். தமிழர்கள் சீமைச்சரக்கை குடித்து குடித்து வயிறு புண்ணாகி வருகிறார்கள்.சீமைசரக்கை குடிக்கும் போது கூடவே பான்பராக், குத்கா, சிகரெட் இத்யாதிகளையும் பிடிக்க வேண்டியதிருக்கிறது.

இப்படி சரக்கை அடித்து விட்டு வண்டியில் ஏறி வீட்டுக்கு புறப்படும் பலர் விபத்தில் சிக்கி வீட்டுக்கு போகாமல் மருத்துவமனைக்கு போகிறார்கள். சிலர் பரலோகம் போகிறார்கள். ஆக, ஈழத்தில் குண்டு வெடிப்பால் பலருக்கு கை,கால் இல்லை. தமிழ்நாட்டில் டாஸ்மாக் சரக்கால் பலருக்கு கைகால் இல்லை. ஈழத்தமிழர்களை சிங்களத்தினர் சுட்டதால் பல பெண்கள் விதவைகளாக ஆக்கப்பட்டார்கள். இங்கு டாஸ்மாக் சரக்கை அடித்து விட்டு கணவர்கள் பரலோகம் போனதால் பல பெண்கள் விதவைகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி ஆட்சி செய்வதும் ஒரு அரசியல் தான். நான் தவறாக சொல்லவில்லை. நீங்கள் மக்களை தமிழ் என்னும் போதை மயக்கத்தில் ஆழ்த்தி விட்டீர்கள். ஆனால் தமிழர்களின் அடையாளத்திற்கு எடுத்துக்காட்டான என்னை மறந்து போனதால் நானும் மெல்ல மெல்ல கண்டுகொள்ளப்படாத மீனவர்களை போல் தமிழ்நாட்டை விட்டு மறைந்து வருகிறேன். இனி என்னை பற்றி விரிவாக உங்களுக்கு சொல்கிறேன். இதற்கு பிறகாவது நீங்கள் என்னை காப்பாற்றி தமிழர்களையும் காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

என் பெயர் 'பனைமரம்' என்பார்கள் தமிழர்கள். இது உங்களுக்கு தெரிந்திருக்காவிட்டால் நீங்கள் அடிக்கடி சொல்லும் தமிழ் இலக்கியங்களில் என்னை பற்றி இருக்கும் வேறு பெயர்களை சொல்கிறேன்.

எனக்கு ' ஓடகம், தாலம், கரும்புறம், காமம்,பெண்ணை, போந்து, புற்பதி,புற்றாளி,தாளி,தருவிராகன் என்று பல பெயர்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் எனது தாவர பெயர் (borassus flabellifer). எனக்கு உங்கள் டாஸ்மாக் சரக்கு போல் இல்லாமல் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதனால் என்னை தமிழர்கள் கற்பக விருட்சம் என்றார்கள். கூடவே எனது பதனீருக்கு பத்ரகாளியம்மன் அமுதம் என்றார்கள். கடுமையான வெயில் காலத்தில் நான் காய்ந்து போக கூடாது என்பதற்காக பானையில் தண்ணீர் சுமந்து என்னை காப்பாற்றினார்கள் தமிழர்கள்.

திருவள்ளுவருக்கு எழுத ஓலை தொடங்கி தமிழ்மக்களுக்கு கல்கண்டு, கருப்பட்டி, கட்டில், சொளவு, வீடு வேய தட்டி என்று எல்லாமும் நான் தான். வான் நோக்கி உயர்ந்து சென்று மழையை வரவழைக்கும் ஆற்றல் எனக்குண்டு. இப்போது ஓசேன் படலம் ஓட்டை விழுந்து விட்டது என்கிறார்களே....என்னை நீங்கள் காப்பாற்றினால் ஓசேன் படலத்தை பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. நான் பார்த்துக் கொள்வேன்.

சரி.விடயத்திற்கு வருகிறேன். தமிழ்நாட்டில் நீங்கள் இலவசங்களை வாரி வழங்க டாஸ்மாக் வருமானம் தான் கைகொடுக்கிறது என்கிறார்கள். பதனீரில் கிடைக்காத போதையா ஓல்டு மாங்கிலும், மேன்சன் ஹவுசிலும் கிடைக்க போகிறது?

இப்போது கிடைக்கும் பிராந்தி, விஸ்கி,ரம்கள் எல்லாம் தமிழர்களின் குடலில் புற்றுநோயையும், புண்ணையும் வரவழைத்து பலருக்கு இப்போது கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் தாராளமாக ஒட்டப்படுகிறதே...பாவம் தமிழர்கள். எனது பனஞ்சாற்றால் உடலுக்கு என்ன நல்லது கிடைக்கும் பனங்கள் உண்டால் எப்படி போதை கிடைக்கும் என்று என்னை பற்றி தெரிந்த சித்தர்கள் எப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் தெரியுமா?

" பனஞ்சாறு, பனங்கள் அல்லது பதநீர் அருந்த உடலின் சக்தி அதிகரிக்கும். சிறுநீர் பெருகும். ஆரோக்கியத்தை தரும். மலச்சிக்கல் தீரும். மேகவெட்டை (gonnorrhoea). பெருங்கிரந்தி (syphilis) நோய்க்கு நல்லது. பனஞ்சாற்றை தேமல் உள்ள இடத்தில் தடவி வந்தால் தேமல் குணமாகும்.

உடலின் உட்சூடு தணியும். வெயில் காலத்தில் பதநீரை சாப்பிட கபம், நாள்பட்ட இருமல், குன்மம், தொண்டை நோய், தோல் நோய்கள் குணமாகும். சோகை தீரும். அம்மை நோயினால் ஏற்பட்ட வெப்பம் தீரும். இப்படி ஏராளமாக சொல்லியிருக்கிறார்கள்.

பனங்கள்ளை உண்டால் போதையும் மயக்கமும் உண்டாகும். நடைதளரும்.மந்தம் உண்டாகும். மதியை மயக்கும்.(இதெல்லாம் எனக்கு இருக்கும் கெட்ட குணங்கள் தான். நான் இல்லையென்று சொல்லவில்லை)
ஆனால் இன்றைக்கு நீஙகள் பிறந்த திருவாரூர் மாவட்டத்திலேயே கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறதே..அதை எதிர்த்து கேட்ட ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தோழரை கள்ள சாராய வியாபாரிகள் நடுரோட்டில் வெட்டி கொலை செய்தார்களே போன வாரத்தில்..அந்த கள்ள சாரயத்தை விடவா, 48 சதவீதம் ஆல்கஹால் கலந்த டாஸ்மாக் சரக்குகளை விடவா கெடுதல் செய்து விடப் போகிறேன்?

என்னை நம்பி தமிழ்நாட்டின் கிராமங்களில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இப்போது என்னில் இருந்து பதநீரை கூட இறக்குவதில்லை. காரணம், கள் இறக்க போவதாக சொல்லி உங்கள் காவலாளிகள் கைது செய்து வழக்கு போட்டு விடுகிறார்கள். சிவகிரி தாலுகாவில் நூற்றுக்கணக்கான பனை ஏறும் தொழிலாளர்கள் மீது இப்படி பொய் வழக்கு புனையப்பட்டதால் அவர்களது அரை வயிற்று கஞ்சிக்கும் இப்போது அடிவிழுந்திருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றனவே.இது உங்கள் கண்ணில் பட்டதா?

பனையால் தொழில் செய்ய கூடாது என்று தமிழர்களை நீங்கள் தடுத்தால் இன்னும் கொஞ்ச காலத்தில் தமிழகத்தின் பல கிராமங்களில் பசியும்,பஞ்சமும் பரவலாக வரத்தான் போகிறது. வறுமை பட்டியல் நீளத்தான் போகிறது. அவர்கள் எவ்வளவு காலம் தான் ஒரு ரூபாய் அரிசியில் காலம் தள்ளுவார்கள். அவர்களுக்கும் சுயமரியாதை இருக்கத்தானே செய்கிறது. அந்த சுயமரியாதை சிலிர்த்து விட்டால் பிறகு என்ன நடக்கும் என்று ரயில் தண்டவாளத்தில் தலை வைத்தும், பாளையங்கோட்டை சிறையில் பாம்புக்கும்,பல்லிக்கும் நடுவில் படுத்த உங்களுக்கு தெரியாதா?

இப்போது உங்கள் சட்டத்தை மீறி கொங்குநாட்டில் கள் இயக்கக்காரர்கள் பனங்கள்ளை இறக்கி சீமானுக்கும், சரத்குமாருக்கும் கொடுத்திருக்கிறார்கள். இனி தாராளமாக கள் இறக்குவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இதனால் என் சந்ததியை ஏராளமாக இடங்களில் தமிழர்கள் வளர்ப்பார்கள் என்று மகிழ்ச்சி எனக்கு வந்திருக்கிறது. கள் இயக்ககாரர்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். நான் செழிக்க செழிக்க தமிழர்களை செழிக்க வைப்பேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன். பிராந்தி, விஸ்கி, பீர்களை விட நான் ஒன்றும் தமிழர்களுக்கு கெடுதல் செய்வதில்லை. இதை விஞ்ஞானிகளும் என்னை சோதனை செய்து பார்த்து நிரூபித்து விட்டார்கள். இப்படி இருக்கும் போது, பதனீர் இறக்குவதை தடை செய்வது, பனைத்தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போடுவது, அவர்களின் குடும்பங்களை பட்டினி போடுவது அடக்குமுறையாக தான் எனக்கு தோன்றுகிறது.

தமிழர்கள் மதி மயங்கி கிடக்கிறார்கள் என்று மட்டும் நீங்கள் நினைத்து விடவேண்டாம். உங்கள் அரசாங்கத்தின் அணுகுமுறையை மாற்றுங்கள், இல்லாவிட்டால் அவர்கள் மாற்றுவார்கள் என்பதை என்னால் தலைவணங்கா முடியாவிட்டாலும் நெடிதுயர்ந்து நின்று சொல்லிக் கொள்கிறேன்.

காரணம், மேலே சொன்ன தத்துவஞானியாக நீங்கள் இல்லாவிட்டாலும்., கொஞ்சம் தொலைநோக்கு பார்வையோடு சிந்திப்பீர்கள் என்று நம்புகிறேன். தமிழகம் ஊனமுற்றவர்களின் கூடாரமாகவும், விதவைகளின் கதறல் களமாகவும் மாறும் முன் முடிவெடுப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்தாருங்கள் கல்கண்டு. நீண்ட நேரம் படித்த களைப்பு நீங்க கொஞ்சம் பதனீர் தருகிறேன். ஆசுவாசப்படுத்திக் கொண்டு சிந்தியுங்கள் முதல்வரே!

ஐயா என்னால் எப்படி வருமானம் வரும் என்று சொல்கிறேன்

திண்டிவனத்திலிருந்து குச்சிக் கொளத்தூர் செல்லும் வழியில் என்னை நட்டிருக்கிறார்கள். ஏரிக்கரையில் வளர்க்கப்பட்டுள்ள என்னால் அந்த கிராமத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் வருவாய் கிடைக்கிறது. விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் என்னால் தரப்படும் நுங்குகளால் 50 லட்சம் அளவுக்கு வருமானம் கிடைக்கிறது.

இதை உங்கள் பனை தொழில் வாரியத்தில் கேட்டுபாருங்கள். இப்படி என்னை தமிழகம் எங்கும் உள்ள ஆறுகள், தமிழகத்தில் உள்ள 39 ஆயிரம் ஏரிகள், குளக்கரைகளில் வளர்த்தால் என்னால் 40 ஆயிரம் கோடி அளவுக்கு வருமானம் (டாஸ்மாக் வருமானத்தை விட அதிகம்) கிடைக்கும்.

நான் சொல்லும் இந்த கணக்கு மிகை அல்ல. உங்களுக்கு நேரமிருந்தால் பனைவாரியத்தில் ஒருவரை நியமித்திருக்கிறீர்களே குமரி ஆனந்தன் என்ற பெயரில். அவரை மாற்றி விட்டு நல்ல வேளாண்மை அதிகாரியையும், விஞ்ஞானியையும் இது போன்ற பதவியில் நியமித்து என்னை வளர்க்க வேண்டிய திட்டங்களை தீட்டுங்கள்.

இந்த கடிதம், தந்தி, தமிழக மக்களின் உணர்ச்சிகளை நான் பார்த்து வடித்தது...இதை நீங்கள் அனுப்பும் தந்தியை மன்மோகன் பாவிப்பது போல் எண்ணிவிடமாட்டீர்கள் என்று நம்பி அனுப்புகிறேன். வாழ்க என்னை போல் நீங்களும்! ( இது வஞ்சப்புகழ்ச்சி அல்ல)


இப்படிக்கு
பனைமரம் என்ற பரிதாபமாக நிற்கும் தமிழர் அடையாளம்.
நன்றி: Green India Foundation.
Posted by dava saravanan at 11:44 AM

Tuesday, March 1, 2011

தமிழக முதல்வர்  அவர்களுக்கு அன்பு வேண்டுகோள் !கடந்த தேர்தலில் இலவச
தொலைகாட்சி பெட்டி கொடுத்திர்கள் !இந்த முறை --வயது நிரம்பிய அனைத்து
பெண்களுக்கும்  பட்டுபுபுடவை இலவசம் என்று அறிவிக்கலாம் ! பயன் ? அனைத்து
பெண்களும் கணவனிடம் வற்புறுத்தி உதயசூரியனுக்கு ஒட்டு அளிக்க
சொல்லுவார்கள்,இளம் ,கல்லூரி,பெண்களும் ,இளம்பருவ
ஆண்களிடமும்,மாணவர்களிடமும் உதயசூரியனுக்கு வாக்குபோட சொல்லுவார்கள்
!மீண்டும் தி,மு,க,ஆட்சி அரியணை ஏறும் ?   ,

தமிழக முதல்வர்  அவர்களுக்கு அன்பு வேண்டுகோள் !கடந்த தேர்தலில் இலவச
தொலைகாட்சி பெட்டி கொடுத்திர்கள் !இந்த முறை --வயது நிரம்பிய அனைத்து
பெண்களுக்கும்  பட்டுபுபுடவை இலவசம் என்று அறிவிக்கலாம் ! பயன் ? அனைத்து
பெண்களும் கணவனிடம் வற்புறுத்தி உதயசூரியனுக்கு ஒட்டு அளிக்க
சொல்லுவார்கள்,இளம் ,கல்லூரி,பெண்களும் ,இளம்பருவ
ஆண்களிடமும்,மாணவர்களிடமும் உதயசூரியனுக்கு வாக்குபோட சொல்லுவார்கள்
!மீண்டும் தி,மு,க,ஆட்சி அரியணை ஏறும் ?   ,

நம்பிக்கை

வீரச்சமர் புரியாமல்
வீரப்புலியொன்றையும் பெற்றெடுக்காமல்
வீரமண்ணில் விதைபொறுக்கி
சேமிக்கின்றேன்
தினம் ஒன்றாய்.
என்றாவது  அவை
முளைத்தெழுந்து நிழல்கொடுத்து
துயிலவைக்கும்
எனும் நம்பிக்கை
எனை தினமும் வாழ்விக்கும்

Monday, February 28, 2011


என்
எவெரெஸ்ட்டும் நீதான்
என்
பசிபிக்கும் நீதான்

உன்னைவிடவும்
பெரிய வெற்றி
எனக்கு இல்லை.
உன்னைவிடவும்
பெரிய தோல்வியும்
இல்லை.