Monday, January 31, 2011

தமிழினமே


தமிழினமே
வீரத் தமிழினமே!
உன் கூரத்தை எங்கே
மழுங்கடித்தாய்.

தமிழினமே
மானத் தமிழினமே!
உன் மானத்தின் பொருளை ஏன்
மறந்துவிட்டாய்.

உன் இனமே அழிவெய்த
உன் குலமே பழிகொள்ள
உன் நாணத்தை எப்படி
தொலைத்துவிட்டாய்.

பாம்புக்குத் தலையும்
மீனுக்கு வாலையும் காட்டி
வாழ ஆரம்பித்த
விலாங்கே,
உன் உடம்பை
யாருக்குப் பந்தியிட
வளர்த்து வருகிறாய்

(ஐந்து பேருடன் சென்ற )
பாஞ்சாலியை
கண்ணகி என்று
கவிபாட உனக்கு
தமிழ் எப்படித் துணை நின்றது?

துச்சாதனனை கண்ணனென்பாய்,
துரியோதனனை தர்மனென்பாய்,
சகுனியையே சகோதரனென்பாயோ?



தமிழினமே
தலைவனை பலியிட்டு
அடுத்தொருவனை ஆதரித்து,
அவனையும் அழித்துவிட்டு
இன்னும் யார்யாருக்கு
வலைவிரிக்க வாழ்கின்றாய்!

ஓட்டைப் படகு நீ,
உன் இனக்கப்பலை
எப்படி இழுத்து வர முடியும்?

அலையில் தள்ளாடும்
உன்னால்
கரை எப்படி
காண முடியும்?

இருளில் நிற்கும் உனக்கு
திசைகள் எப்படித் தெளிவாகும்?

வெறும் ஊன்
தசைகாட்டி வாழும் நீ
திசைகாட்டுவது எப்படி இயலும்?

இளைய பிஞ்சுகள்
கிளைப் பாதைகளில்
எவ்வழி தேர்ந்து ஏகுவது?


தமிழினமே!
பண்பாடு என்ற சொல்லின்
பதம் மாற்றிப் புணர்ந்தாய்.

விடுதலையின் பொருளை
விபரீதமாக்கினாய்.

நாணம் துறந்தாய்,
மானம் மறந்தாய்.
உலக பந்தங்களில்
உணர்விழந்து போனாய்.

உலக(நாத)பந்தங்களில்
உணர்வழிந்து பறந்தாய்.

உன்னை நம்பிய
கொடிகளுக்கு நீயா
கொம்பாவாய்?

ஓடுடைத்து வெளிவரும்
குஞ்சுகள்க்கு நீயா
தாயாவாய்?

தளர்நடையிடும்
தலைமுறைகளுக்கு நீயா
வழிகாட்டி?

தடுமாறும்
உன் படிக்கட்டுகள்
எந்தச் சிகரத்துக்கு
இட்டுச் செல்லும் ?

துரோகங்களே
உன் வாழ்க்கை.

தலைவனின் தாழ்வு
உனக்கு வாழ்வு.

தோழமையின் துன்பம்
உனக்கு இன்பம்.

உன் மக்கள்
சோகத்தில் மடியும்போது..

தலைமைப் பதவியிடம்
மோகத்தில் நீ
மூழ்கிக் கிடக்கிறாய்.

உப்பரிகையில்
உற்சாகமாய்...

ஊர்வலத்தில்
உல்லாசமாய்...

உரசல்களில்
சல்லாபமாய்.. நீ.


தலை தாழ்ந்த தமிழினமே,

ஓருண்மை அறி.
அநீதி
அழிந்தே தீரும்.

உன் துரோகங்களுக்கு
உரிய தண்டனைகளை
அடைந்தே தீர்வாய்.

தமிழ் வாழும்.
இந்தத் தரணியும் வாழும்..

பசப்பு மொழிகளும்
பச்சைப் பொய்களும்
வஞ்சகங்களும்
துரோகங்களும்.....!?

நாளை காணட்டும் நாடு.

No comments:

Post a Comment