என் அன்பே
என்னைத் தெரிகிறதா ?
நான்தான் அந்த நான்!
உன் குழவிப் பருவத்தில்
உனைக் குழைத்து வாசித்த
குழல்தான் நான்!
உனை வருடிச் சிலிர்த்த
இளங்காற்றுதான் நான்!
நீ தீண்டி மகிழ்ந்த
தேன்மலர்தான் நான் !
நீ நடந்தாடிய
தூமணல்தான் நான்!
உன் பூம்பாதம் ஏந்திய
பூவிதழ்கள்தான் நான்!
உன் துகிலுக்கும் துயிலுக்கும்
தூளியாய் கிடந்தது
நான்தான் !
நீ வீசியெறிந்து
விளையாடிய பாவை
நான்தான்!
நீ தொட்டுச் சிலிர்த்த
பனித்துளி
நான்தான்!
நீ
பட்டுப் புரண்ட
பச்சைப் புல்வெளி
நான்தான்!
நீ
தட்டித் தெறித்த
தண்ணீர்த் துளி
நான்தான்!
உன்
தூண்டலில் எரிந்த
தீச் சுடர்
நான்தான் !
உன்
விழிகள் விரிந்த
வியப்புகள்
நான்தான்!
உன்
இமைகளைத் திறந்த
வெளிச்சம்
நான்தான்!
உன்
கனவுகள் கொண்ட
வண்ணங்கள்
நான்தான்!
நீ
கேட்டு மகிழ்ந்த
கதைத் திரள்
நான்தான்!
நீ
சொல்லிச் சிரித்த
சொற்கவி
நான்தான்!
உன்னை வரைந்த
தூரிகை
நான்தான்!
உன்னை எழுதிய
கோலமும்
நான்தான்!
உன்
மொழிக்கென செந்தேன்
கொணர்ந்தது
நான்தான்!
உன் வீதியில் நின்று
இரந்ததும்
நான்தான்1
.....
இன்று...
உயிர் பிரியுமுன்
உன்னைக் காணத் துடிப்பதும்
அதே
அதே
நான்தான்!
No comments:
Post a Comment