Tuesday, February 22, 2011

என் ஜென்மம்



என் ஜென்மம்

எப்போதோ நீ அன்னமிட்ட் காரணத்தால்
நீ
முகவரி மாறிப் போன பின்னும்
இரைக்கென்று
எவரெவர் கைகளையோ
எதிர்பார்த்து நின்றும்
உன் போல் தோற்றமுடன்
வருவோர் போவோர யாவரையும்
வாழ்த்திக் குழைந்து
அவர் பின்னே சில தூரம் ஓடி
வழக்கம்போல் ஏமாற்றத்துடன்
வாடித் திரும்பி

அருநிழலோ,
வெறு மணலோ,
குப்பையோ,
குளக்கரையோ,
சருகோ,
புதர் மறைவோ என...
உரிமையிலா ஓரிடத்து
ஒடுக்க மூலையொன்றில்
அடுத்து வரும் விரட்டலிடை
ஓய்வாய் சிலகணங்கள்..

உன் நினைவில் உயிர்த்துறைந்து
என்றோ
ஒரு நாளில்
இரண்டாம் மரணமுற்று
நாறி
நாறிப் போன தன் வாழ்வை
ஊருக்குப் பறைசாற்றி

மண் தின்ன மறைந்துவிடும்
சுவடு வரலாறு
ஏதுமில்லா தெருப்பிறப்பாய்

தீர்ந்து போனதென் ஜென்மம்.

No comments:

Post a Comment